ஜெய்சங்கரின்-மனிதம் புனிதம் ஆகிறது.

அண்மையில், தந்தையர் தினம் கொண்டாடப்பட்ட அன்று
மறைந்த தமிழ்நடிகர் ஜெய்சங்கரின் மகன் டாக்டர் விஜய்சங்கர் தன் தந்தையைப் பற்றிய சில செய்திகளை பகிர்ந்து கொண்டார்….. அதன் அடிப்படையில் அமைந்தது இந்த இடுகை…..

60-களில், ஜெய்சங்கர் தமிழ் திரையுலகில் நுழைந்த சமயம்,
நான் வடக்கே ஜபல்பூரில் இருந்தேன்…. அங்கே ஞாயிற்றுக்கிழமைகளில்
ஒரே ஒரு தியேட்டரில் ஒரே ஒரு காட்சி மட்டும் தமிழ்ப்படங்கள்
வரும். தொலைக்காட்சி இந்தியாவுக்கே வராத நேரம் அது…. எனவே,
தமிழ்ப்படங்கள் காணக்கிடைப்பதே அபூர்வம் என்கிற நிலையில்,
எந்தப்படம் வந்தாலும் நான் நிச்சயம் பார்ப்பேன்.

அப்போது தான் ஜெய்சங்கர் படம் ஒன்றை முதன்முதலாக பார்த்தேன்.
வெற்றிகரமாக ஓடிய படம் அது…. சிவாஜி, எம்.ஜி.ஆர், இருவருமே
உச்சத்தில் இருந்த காலகட்டம் அது… அந்த சமயத்தில், ஜெய்சங்கர்
நடித்த பல படங்கள் நன்றாக ஓடியது குறித்து எனக்கு வியப்பாக
இருந்தது.

வீடியோக்கள், சமூகவெளி தளங்கள் எல்லாம் அப்போது இல்லாததால்,
ஜெய்சங்கர் பற்றிய பர்சனல் தகவல்கள் எல்லாம் ஒன்றும் பார்க்க
கிடைக்கவில்லை….. பிற்காலங்களில், துக்ளக் ஆசிரியர் சோ அவர்களின்
எழுத்துக்கள் மூலம் தான் நான் ஜெய்சங்கரின் அற்புதமான
மனிதாபிமானம், உதவிசெய்யும் குணம் ஆகியவை பற்றியெல்லாம்
தெரிந்து கொள்ள ஆரம்பித்தேன்…

அவரைப்பற்றி, பிற்காலத்தில் நிறைய கேள்விப்பட்டிருக்கிறேன்….
ஜென்டில் மேன் – குறைந்த சம்பளத்தில் நிறைவாக நடித்து தந்தவர்
அவர் யாருக்கும், எந்தவித தொந்தரவும் தந்ததில்லை..
ஈகோ பார்த்தது இல்லை.. சம்பளத்தில் பாக்கி வைத்தால், அதையும் கேட்பதுமில்லை… “அவங்ககிட்ட இல்லேன்னுதான் நமக்கு தரமுடியாம இருக்காங்க. அவங்களுக்கு கிடைக்கும்போது தரட்டும்.
கிடைச்சும் தரலையா… பரவாயில்ல” என்று அனைத்தையும்
எளிதாக எடுத்து கொண்டவர்..

தன்னுடைய மென்மையான அணுகுமுறையாலும், மிகைப்படுத்தப்படாத நடிப்பாலும், மக்கள் கலைஞர் என்ற படத்தை மிக குறுகிய காலத்திலேயே அவரால் பெற முடிந்தது.

இனி, இங்கே ஜெய்சங்கரின் மகன் கூறுவது –

……….

என்னை டாக்டர் ஆக பார்த்ததில் அப்பாவுக்கு நிறைய சந்தோஷம்.
அதிலும் கண் மருத்துவராக ஆனது கூடுதல் சந்தோஷம். ஆனாலும்
என்னுடைய அப்பா என்கிட்ட அடிக்கடி “நீ படிச்சது பெருசு இல்ல,
நீ என்னை போலவே பலருக்கு உதவி செய்யணும்” என்று சொன்னார்.

அதனாலேயே நான் என்னுடைய தந்தையின் பிறந்தநாளுக்கும்,
திருமண நாள் மற்றும் விசேஷ நாட்களில் இலவசமாக பலருக்கும்
கண் அறுவை சிகிச்சை செய்து வருகிறேன். மேலும் என்னை
“ஆயிரம் ஆப்பரேஷனாவது பண்ணிடுப்பா” என்று என்னுடைய அப்பா வாழ்த்தினார். அவருடைய ஆசையை நிறைவேற்றி நிஜமாக்க
வேண்டும் என்பதற்காக தான் நான் இப்போதும் என்னுடைய
25 வருட அனுபவத்தில் “பல ஆயிரத்திற்கும் மேற்பட்ட
கண் ஆபரேஷன்கள்” செய்து முடித்திருக்கிறேன்.

இப்போ அவர் கூட இல்லன்னாலும் இதை பாத்து நிச்சயம்
சந்தோஷப்பட்டு இருப்பார் என்பது எனக்கு தெரியும், அப்பாவின்
100வது படமான “இதயம் பார்க்கிறது” என்ற படத்தில் கூட கண் பார்வை இழந்தவர் வேடத்தில் நடித்திருப்பார். பொதுவாகவே அப்பாவுக்கு கண் தெரியாதவர்களை ரொம்பவே பிடிக்கும். அவர்களுக்காக அப்பா
வெளியே தெரியாமல் நிறைய செய்திருக்கிறார்.

அதே கண் சார்ந்த துறையில் நான் மருத்துவர் என்பதால் அப்பா
சினிமா துறையை சேர்ந்தவர்கள் என்பதாலும் நான் வருடத்தில்
ஒருமுறை சினிமா துறையில் இருப்பவர்களுக்கு இலவச கண் சிகிச்சை
முகம் நடத்தி வருகிறேன். இது நான் எனது தந்தைக்கு செலுத்தும்
நன்றி கடன்.

அப்பாவிடம் நான் வியந்து பார்த்தது என்னன்னா அவருடைய
நண்பர்கள் தான். அவருக்கு அவ்வளவு நண்பர்கள் இருக்கிறார்கள்.
ஒருவர் இவ்வளவு நண்பர்களை சம்பாதிக்க முடியுமா? என்று எனக்கு
அவரைப் பார்த்து ஆச்சரியமாக இருந்தது. அதுமட்டுமல்லாமல் நான் பார்த்தவரையில் பணத்தின் மீது பற்று அற்றவராக தான் இருந்தார்.

நிறைய உதவிகள் சிலர் கேட்டும், சிலர் கேட்காமலும் செய்து கொடுத்திருக்கிறார். வெளியே தெரியாத அளவில் செய்து கொண்டே
இருந்தார். அப்பா பற்றி நிறைய விஷயம் அவரின் இறப்புக்குப் பிறகு
தான் எனக்கே தெரிய வந்தது.

அப்பா இல்லாததை நான் எந்த சூழலிலும் உணரவில்லை.
எல்லா விதத்திலும் என்னுடன் இருந்து கொண்டிருப்பதாக
நினைக்கிறேன். ஆனால் அப்பாவை பற்றி நிறைய பேர் நல்லவிதமாக
சொல்லி கேட்கும் போது மனசுக்கு சந்தோஷமாக இருக்கிறது.
இதுபோல எங்க வீட்டில என்ன விசேஷங்கள் இருந்தாலும் அப்பா
ஆதரவற்றோர் இல்லங்களுக்கு போய்தான் விருந்து வைத்து
கொண்டாடுவார். அங்கு குழந்தைகளுக்கு விருந்து வைத்து
தனக்கு தெரிந்த நண்பர்களை கூப்பிட்டு அவரின் கையால் பரிமாற
வைப்பார். அப்ப கூட எல்லா செலவுகளையும் நீங்க பண்ணிட்டு
அதை ஏன் மற்றவர்கள் கையால் தர சொல்றீங்க என்று
கேட்டிருக்கிறார்கள்.

அதற்கு அவர் நான் கூப்பிட்டு வருகிற பெரிய மனிதர்கள் யாரும்
இந்த மாதிரி இடங்களுக்கு எல்லாம் இதுவரைக்கும் வந்திருக்க
மாட்டாங்க. அதனால இது ஒரு வாய்ப்பா இருந்து இந்த உதவி
அவர்களின் மனசை தொட்டு நாளைக்கு அவர்களும் இதே மாதிரி
உதவி செய்ய முன் வருவார்கள் என்று தான் ஒரு தூண்டுகோளா
என்னுடைய முயற்சி அமையட்டும் என நான் இப்படி பண்றேன்
என்று சொல்லி இருக்கிறார்.

அதுபோல இப்போதும் அப்பாவின் நண்பர்கள் மற்றும் சினிமா
துறையை சார்ந்த பலர் என்னிடம் பேசும்போது நீங்க உங்க அப்பாவை
மிஞ்சி விட்டீர்கள் என்று சொல்றாங்க. ஆனா அதை நான் ஏத்துக்க
மாட்டேன். எப்போதும் அவர் நிழல்தான் நான். என்றுமே ஜெய்சங்கர்
மகன்தான் நான். அதுதான் எனக்கு மகிழ்ச்சி என்று கூறி இருக்கிறார்.

……………

சில நாட்களுக்கு முன்பு, மூத்த பத்திரிகையாளரும், பிரபல
தயாரிப்பாளருமான சித்ரா லட்சுமணன், பெருந்தன்மையான
நட்புக்காக ஒரு உதாரணத்தை சொல்லியிருந்தார்..
அதன் சுருக்கம் –

“அன்புள்ள ரஜினிகாந்த்” படத்தை பிரபல தயாரிப்பாளர் அழகன்
தமிழ்மணி எடுத்திருந்தார்.. இந்த படத்தில், ஜெய்சங்கர் கெஸ்ட் ரோல் செய்திருப்பார்.. கெஸ்ட் ரோல் என்பதால் பணம் எதுவும் வாங்காமல் நடித்திருந்தார். ஆனாலும், அழகன் தமிழ்மணி விடவில்லை..

படத்தில் நடித்ததிதற்காக 50,000 ரூபாய் தந்தாராம்.. உடனே ஜெய்சங்கர்,
உன் படத்தில் நடிக்க எனக்கு பணம் தரணுமா, என்ன? வேண்டாம்
என்று சொல்லி மறுத்துள்ளார்.. ஆனாலும், அழகன் தமிழ்மணி
விடலையாம்..

“என் நட்புக்காக முன்னுரிமை தந்து, உடனே வந்த நடிச்சு தந்திருக்கீங்க, அதனால், இந்த பணத்தை வாங்கி கொள்வதே முறை.. ஒருவேளை என்னைக்காவது எனக்கு கஷ்டம் ஏற்பட்டால் அப்போ உங்களிடம் வாங்கி கொள்கிறேன்” என்று சொல்லி, அந்த பணத்தையும் தந்துவிட்டு வந்தாராம்.

இந்த படத்தை முடித்துவிட்டு, அடுத்த படத்தின் வேலையை
துவங்கியிருந்தார் அழகன் தமிழ்மணி.. அந்த படத்தின் ரீ-ரிக்கார்டிங் பணியானது, போதிய பணமில்லாமல் நின்றுவிட்டது..
பணம் இருந்தால்தான், ரீ-ரிக்கார்டிங் நடக்கும் என்ற சூழலும்
வந்துவிட்டது.. பணத்துக்காக அழகன் தமிழ்மணி திண்டாடறார்..
ஆனால், பணத்தை அவரால் புரட்ட முடியாமல் திணறி உள்ளார்.

வழக்கமாக ஜெய்சங்கருக்கு தினமும் போன் செய்து பேசிவிடுவாராம்
அழகன் தமிழ்மணி.. ஆனால், இந்த டென்ஷனில் ஜெய்சங்கரிடம்
பேசாமல் இருந்திருக்கிறார்.. ஒருமுறை அழகன் தமிழ்மணியை
நேரில் பார்த்த ஜெய்சங்கர், “என்னாச்சு, உன்கிட்ட இருந்து நாலஞ்ச நாளா
போன் காணோமே” என்று கேட்டுள்ளார். அதற்கு அழகன் தமிழ்மணி, “பணத்துக்காக படம் பாதியில் நிற்கிறது” என்று சொல்லிஉள்ளார்.

உடனே ஜெய்சங்கர், “பணம் கிடைச்சதா?” என்று கேட்கவும், “ஓரளவு சமாளிச்சிட்டேன். தயார் பண்ணிட்டு இருக்கேன்” என்று சொல்லி
உள்ளார்.. அதற்கு ஜெய்சங்கர், “சரி நாளை காலைல எனக்கு போன்
பண்ணு” என்று சொல்லி உள்ளார்.

“சரி” என்று தலையாட்டினார் அழகன் தமிழ்மணி.. எப்படியும் தனக்கு
பணத்தை தருவதற்காகத்தான் போன் செய்ய சொல்கிறார் என்பதை
அறிந்த அழகன் தமிழ்மணி, மறுநாள் காலை ஜெய்சங்கருக்கு போன் பண்ணலயபாம்.. ஆனால், ஜெய்சங்கர் அப்போதும் விடவில்லை.
காலையிலேயே நேராக அழகன் தமிழ்மணி வீட்டுக்கு வந்துட்டாராம்.

கட்டிய லுங்கியுடன் உள்ளே நுழைந்த ஜெய்சங்கர், ஒரு கட்டு
பணத்தை தந்துள்ளார். அதை அழகன் தமிழ்மணி வாங்கி பிரித்தால்,
ஒரு லட்சம் ரூபாய் இருந்ததாம். தான் கொடுத்ததைவிட, இரண்டு
மடங்காக ஜெய்சங்கர் திருப்பி தந்திருந்தாராம்.
ஒரு பெருந்தன்மையான நட்பு என்றால் இப்படி இருக்கணும் என்று
நெகிழ்ந்து சொல்லி இருக்கிறார் சித்ரா லட்சுமணன்.

வயது கூடிக்கொண்டே வர, வர பட வாய்ப்புகள் குறைந்தாலும்,
அவரது தயாள குணம் மட்டும் கடைசி வரை குறையவே இல்லை
என்று அவரை அறிந்த பலரும் பாராட்டுகிறார்கள்…..

இவ்வளவு நல்ல மனிதர் ஜெய்சங்கரை நான் ஒரே ஒரு தடவை,
பாண்டிச்சேரியில், ஒரு ஒட்டலில் அவர் தனது நண்பர்களுடன்
சேர்ந்து அரட்டை அடித்துக்கொண்டு உணவருந்திக்கொண்டிருந்தபோது
பார்த்திருக்கிறேன். அவருடன் நிறைய பேர் இருந்ததால், பேசக்கூடிய
சூழ்நிலை இல்லை….!!!

ஜெயசங்கருடன் சமகாலத்தில் அவரை விட உச்சத்தில் நடித்துக்கொண்டிருந்த பல நடிகர்களைப்பற்றியெல்லாம் இன்று யாரும் பேசுவதில்லை; ஆனால், ஜெயசங்கர் மட்டும் தொடர்ந்து பேசப்பட்டுக்கொண்டிருக்கிறார்….. ……

ஏன்…???

ஒரு நடிகராக மட்டுமல்லாது – சிறந்த மனிதராக, இரக்ககுணம் உள்ளவராக, எல்லாருக்கும் உதவக்கூடிய உள்ளம் கொண்டவராக இருந்ததால் தானே …??? நல்லவர்களைப்பற்றி பேசுவோம்… இன்னும் நாலு நல்ல மனிதர்கள் உருவாவார்கள்…!!!

Leave a comment